கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேர்தல் பணிகளில் எவ்வாறு முனைப்புடன் ஈடுபடுவது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ நாடே தீப்பற்றி எரிகிறது என்ற, கனிமொழியின் வார்த்தையில் இருந்து ஒன்று புரிகிறது. தமிழ்நாட்டில் பாஜக வேகமாக வளர்வதை பார்த்து திமுகவினரின் அடிவயிறு பற்றி எரிகிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக மாற்றவும், வறுமையை ஒழிக்கவும் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வருவது என அறிஞர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதனை விவசாயிகளும் வரவேற்கின்றனர். ஆனால், விவசாயிகளை வைத்து அரசியல் நடத்த விரும்புபவர்கள் எதிர்க்கிறார்கள். அவர்களது இன்றைய போராட்டம் மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது.