தூத்துக்குடி:தூத்துக்குடியில் சோரீஸ்புரம், நியூ சுந்தரம் நகர்ப்பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் சுப்பிரமணியன் (51) என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 11அன்று முத்தம்மாள் காலனி பகுதியைச் சேர்ந்த அம்சவள்ளி (36), வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், தங்க நகைகளைத் திருடிச் சென்றுவிட்டனர்.
அதேபோன்று கடந்த ஆகஸ்ட் 8அன்று தூத்துக்குடி கே.டி.சி நகர்ப் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் சுதானந்தம் (61) என்பவரது, வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து சிலர் திருடியுள்ளனர். திருடுபோன நகைகளின் உரிமையாளர்கள் கொடுத்தப் புகார்களின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், தனிப்படை அமைத்து கொள்ளையர்களைக் கண்டுபிடித்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.
சிக்கிய நால்வர்
அதன்பேரில் தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும்; துப்பு துலக்கியும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்த சுப்புக்கனி மகன் மாரிச்செல்வம் (19), கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் மகன் முனீஸ்துரை (21) மற்றும் 2 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேரும் மேற்படி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து, தொடர் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து கடந்த 16ஆம் தேதி தனிப்படையினர் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்டப் பகுதியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 32 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர்.