தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வைப்பாறு, கயத்தாறு ஆகிய பகுதிகளில் இடி மின்னல் தாக்கி வைப்பாறு சேர்ந்த கோட்டை பாண்டி, ரமேஷ், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, முருகராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்ச ரூபாய் முதலமைச்சரின் நிவாரண நிதியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி ஆகியோர் இன்று (மே 16) நேரில் சென்று வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ஆகியோர் பேட்டியளித்தனர்.
அப்போது, தமிழ்நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ள நிலையில் ஸ்டெர்லைட்டில் பழுது காரணமாக ஆக்ஸிஜன் உற்பத்தி தடைபட்டுள்ளது. இது எப்போது சரி செய்யப்படும் என்ற கேள்விக்கு கனிமொழி எம்.பி., "ஸ்டெர்லைட் ஆக்ஸிஜன் உற்பத்தியில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு விட்டது. வரும் புதன்கிழமை (மே 19) முதல் மீண்டும் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கும் என ஸ்டெர்லைட் தரப்பில் தெரிவித்துள்ளனர்" என்றார்.