தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கீதா ஜீவனை ஆதரித்து, கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய உதயநிதி, “தமிழ்நாட்டில் முதல்முதலில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது நான்தான். இதற்காக என்னை கைது செய்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், தற்போது பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதே பெண் அதிகாரிக்கு பாதுகாப்பில்லாத நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார்.
’ஆட்சி போனதையும் டிவியில் பார்த்து பழனிசாமி தெரிந்து கொள்ளட்டும்' ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேரை பட்டப்பகலில் சுட்டுக் கொன்ற ஆட்சி பழனிசாமி ஆட்சி. இதில் பள்ளி மாணவியான ஸ்நோலின் வாயிலேயே சுடப்பட்டு இறந்தார். இத்துப்பாக்கிச்சூடு குறித்து நீதி விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து 3 ஆண்டுகள் ஆகியும் விசாரணை முடிந்தபாடில்லை. ஆனால் போராட்டம் செய்த மக்கள் 71 பேர் மீது சிபிஐ பொய் வழக்கு பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதில் காவல்துறையினர் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டதாகக் கூறிய பழனிசாமி, அதிமுக ஆட்சி போனதையும் டிவியில் பார்த்து தெரிந்து கொள்ள நீங்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு - கலவரம் - குற்றப்பத்திரிகையில் உள்ள 71 பேர் யார் யார்?