தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் ஆரோக்கிய மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் சந்தானம் (46). இவர் கயத்தார் காவலர் குடியிருப்பு அருகே மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று (ஜூலை 27) தளர்வு இல்லாத ஊரடங்கு என்பதால் சந்தானம் வீட்டிலேயே இருந்தார். இந்நிலையில், நேற்றிரவு ஒன்பது மணியளவில் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
கயத்தார் கடம்பூர் சாலைப்பகுதியில், சங்கிலி பாண்டியன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. அங்கு சென்ற சந்தானம் 100 ரூபாய் கொடுத்து மது கேட்டுள்ளார், நூறு ரூபாய்க்கு மது விற்கப்படுவதில்லை என சங்கிலி பாண்டியன் கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த சந்தானம் சங்கிலி பாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, அங்கிருந்த காளிமுத்து, சுடலை கண்ணு, விஜயகுமார் உள்ளிட்டோர் சங்கிலி பாண்டியுடன் சேர்ந்து சந்தானத்தை கடுமையாக தாக்கினர். இதில் காயமடைந்த சந்தானம் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த அவரது நண்பர்கள் சந்தானத்தை மீட்டு வீட்டின் அருகே விட்டுச் சென்றனர். ஆனால், அவர் வீட்டிற்கு செல்லாமல் அருகே உள்ள திண்ணையில் உறங்கியுள்ளார்.