தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சக்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் தனது குடும்பத்தினருடன் தங்கி மளிகைக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சொந்த ஊரான சக்கம்மாள்புரத்தில் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பிரபாகரன் தன்னுடைய மனைவி, மகன்கள் இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு சொந்த ஊரான சக்கம்மாள்புரத்துக்கு நேற்று முன்தினம் சென்றிருந்தார்.
நேற்று காலை உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட அவர், மதியத்துக்கு மேல் தன்னுடைய மகன்கள் இருவரையும் தன்னுடைய பெற்றோர் கவனிப்பில் வீட்டில்விட்டு விட்டு மனைவியுடன் வெளியே சென்றிருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் சக்கம்மாள்புரம் வீட்டின் அருகே இருந்த குளத்தில் மீன்பிடிக்கச் செல்வதாக கூறிவிட்டு அண்ணன்- தம்பியான மாதேசும், மாரீசும் குளத்திற்கு கிளம்பி சென்றுள்ளனர். வெகுநேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த உறவினர்கள் குளத்தில் தேடிபார்த்தனர். அப்போது அவர்கள் குளத்தில் மூழ்கியது தெரியவந்தது.
சக்கம்மாள்புரம் பகுதியில் சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், சாயர்புரம் காவல் துறையினர் நீரில் மூழ்கிய இருவரையும் மீட்டனர்.
அவர்களை பரிசோதனை செய்ததில், இருவரும் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உடற்கூறாய்வுக்காக இருவரின் உடலையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குளத்தில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.