தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், திருச்செந்தூர் ஆகிய தொகுதிகளில் திமுகவும், காங்கிரஸ் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும், கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்டார். தூத்துக்குடி சிதம்பர நகர் நிறுத்தம் அருகே அவர் பேசும்போது, “தூத்துக்குடியை மாநகராட்சியாக்கியது, தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் இதுபோன்ற எண்ணற்ற சாதனைகளை என்னால் சொல்ல முடியும்.
ஆனால், தூத்துக்குடிக்கு செய்ததாக அதிமுக வால் அப்படி எதையும் சொல்ல முடியாது. ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு அரங்கேற்றியதுதான் அதிமுக அரசின் சாதனை. மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு 13 பேரை படுகொலை செய்தன. இந்த படுகொலை செய்த கூட்டத்துக்கு தேர்தலில் நாம் பாடம் புகட்ட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் குடும்பத்துக்கு தகுதிக்கேற்ப வேலை வழங்கப்படும். சாத்தான்குளத்தில் ஜெயராஜ் பென்னிக்ஸை சிறையிலேயே வைத்து அடித்து சித்ரவதை செய்து இந்த அரசு கொன்றுள்ளது.