தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுடன் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19ஆம் தேதி தொடங்கியது.
வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடியும் நிலையில் இன்று வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்தது.
அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நண்பகல் 12 மணி அளவில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கானஅதிமுக - பாஜக கூட்டணிக் கட்சியின் வேட்பாளரான தமிழிசைமாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் வேட்புமனுவினை தாக்கல் செய்தார்.
பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது, ’அதிமுக பாஜக கூட்டணிக் கட்சியின் வேட்பாளராக நான் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறேன். இந்தத் தொகுதியில் நிறைய முன்னேற்றம் காணப்பட வேண்டும். ஒரு நேர்மறையான அரசியலைத் தூத்துக்குடியில் எடுத்துச் செல்வதற்காக, நான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். மக்கள் எனக்கு அமோக ஆதரவு தருவார்கள். கூட்டணிக் கட்சியினர் எனக்கு நல்ல ஒத்துழைப்பை வழங்கிவருகின்றனர்’ எனக் கூறினார்.