திருநெல்வேலி:தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் கலந்துகொண்டார்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், கூட்டணி பேச்சுவார்த்தை உள்பட அனைத்து விஷயங்களில் முடிவெடுக்க எனக்கு முழு அதிகாரம் அளித்து செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேவேந்திரகுல வேளாளர் என்ற அரசாணை 30 நாள்களுக்குள் வெளியிடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருப்பது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தக் கோரிக்கைக்காக 40 ஆண்டுகளாகப் போராடிவருகிறோம். நிச்சயம் அரசாணை வெளியிடுவார்கள் என்ற நம்பிக்கை முழு அளவில் எங்களுக்கு உள்ளது" என்றார்.
அதிமுக, திமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, "முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பது அந்தந்தக் கட்சிகளின் கருத்து. நாங்கள் இன்னும் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். நான்தான் முதலமைச்சர், நீதான் முதலமைச்சர் என்று யார் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். முதலமைச்சர் யார் என்பதை மக்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்" என்றார்.
டாஸ்மாக் கடைகள் குறித்து கேட்டபோது, "தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். டாஸ்மாக் கடைகளை அடைக்கும்படி வற்புறுத்த முடியாது" என்று கூறினார்.
ஜான்பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு மேலும், "எங்களைப் பட்டியலினத்திலிருந்து வெளியேற்றும் கோரிக்கையை நாங்கள் முன்வைக்கவில்லை. தேவேந்திரகுல வேளாளர் அரசாணை மட்டும்தான் எங்களது கோரிக்கை. பட்டியலினத்திலிருந்து வெளியேற்றுவது மத்திய அரசு செய்ய வேண்டிய நடவடிக்கையாகும். அதை நாங்கள் தற்போது வலியுறுத்தவில்லை" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:ரஜினிகாந்த் எங்களுக்கு ஆதரவளிக்கக்கூட வாய்ப்புள்ளது' - முத்தரசன்