தமிழ்நாடு

tamil nadu

'நெல்லை வருவாய்க் கோட்டாட்சியர் ஒரு ரவுடி' - தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி தாக்கு!

By

Published : Jan 31, 2021, 7:50 AM IST

நெல்லை வருவாய்க் கோட்டாட்சியர் ஒரு ரவுடி என்றும், இங்கு இடிக்கப்பட்ட இடம் புறம்போக்கு இடம் என்றால் பட்டா வழங்கிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயாரா? என்றும் குற்றச்சாட்டுகள் வைத்து தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

tirunelveli thowheed jamath protest
tirunelveli thowheed jamath protest

திருநெல்வேலி: கொக்கிரகுளத்தில் இருந்து நெல்லை சந்திப்பு பகுதியை இணைக்கும் வகையில் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ஆற்றுப்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டிலிருந்து வருகிறது.

இந்த சூழலில், நெல்லை சந்திப்புப் பகுதியில் ஏற்பட்டு வரும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கொக்கிரகுளத்திலிருந்து நெல்லை சந்திப்பு நோக்கிய பழைய ஆற்றுப் பாலத்தின் அருகில் புதிதாக சுமார் 16 கோடி ரூபாய் செலவில் பாலம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள்

நெல்லை சந்திப்பு அரவிந்த் கண் மருத்துவமனை எதிரில் சாலையோரம் உள்ள கடைகளும், வீடுகளும் பாலத்தின் முடிவில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் பாலம் திறக்கப்படாமல் இருந்த நிலையில், ஜனவரி 27ஆம் தேதி மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் இணைந்து புதிய பாலத்தின் அருகில் சாலையோரம் இருந்த 16 கடைகள், 9 வீடுகள் உள்பட 32 கட்டடங்களை இடித்து தரைமட்டமாக்கினர்.

அரசு தரப்பில் அந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட புறம்போக்கு நிலம் என்று கூறப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தரப்பில் தங்கள் இடத்திற்குப் பட்டா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் முறையாக வைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி வந்தனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள்

இந்த சூழ்நிலையில் நெல்லை வருவாய்க் கோட்டாட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி நீதிமன்ற உத்தரவை மீறி சட்டத்திற்குப் புறம்பாகக் கடைகள் மற்றும் வீடுகளை இடித்ததாகத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குற்றச்சாட்டை வைத்தது. மேலும், கிருஷ்ணமூர்த்தியைக் கண்டித்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் கொக்கிரகுளம் எம்ஜிஆர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அந்த அமைப்பைச் சேர்ந்த பெண்கள், முதியவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிவ.கிருஷ்ண மூர்த்தி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களைக் கண்டித்துக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி, நெல்லை வருவாய்க் கோட்டாட்சியர் ஒரு ரவுடி என்றும், இங்கு இடிக்கப்பட்ட இடம் புறம்போக்கு இடம் என்றால் பட்டா வழங்கிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயாரா? என்றும் குற்றச்சாட்டுகள் வைத்து தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

தவ்ஹீத் ஜமாத்

ABOUT THE AUTHOR

...view details