திருநெல்வேலி: பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலையில் காரையாறு அணை அருகே வனத்துறைக்கு சொந்தமான குடியிருப்பு ஒன்று பாழடைந்துகாணப்படுகிறது. அந்தக் கட்டடத்தை இடிக்கும் பணியில் தொழிலாளர்கள் இன்று (மார்ச் 19) ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கட்டடத்தை இடித்து கொண்டிருக்கும்போது திடீரென கட்டடத்தின் முன்பகுதி தானாகவே இடிந்து விழுந்ததில் வி.கே. புரம் அடுத்த அணவன் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி திருமலைசாமி(50) இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. நேற்று (மார்ச் 18) மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்த நிலையில், சம்பந்தப்பட்ட கட்டடம் ஈரப்பதத்துடன் காணப்பட்டுள்ளது. இதையறிந்தும் எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் தொழிலாளர்களை கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபடுத்தியதால்தான் இந்த விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த தொழிலாளி திருமலைச்சாமி இதற்கிடையில் விஷயத்தை மூடி மறைக்கும் வகையில் வி.கே.புரம் காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், "வனத்துறைக்கு சொந்தமான குடியிருப்பு இடிக்கும் பணியில் ஈடுபட்டபோது தொழிலாளி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக, இபிகோ 174ஆவது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கட்டுப்பாட்டை மீறி பைக் சாகசம் - போலீஸ் விசாரணை