திருநெல்வேலி: கோபாலசமுத்திரம் அருகே சில நாள்களுக்கு முன்பு சாதி மோதல் காரணமாக இரு சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அடுத்தடுத்து கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்டனர். பழிக்குப் பழி வாங்கும் போக்காக இந்தக் கொலை சம்பவம் அரங்கேறியது.
எனவே அடுத்தகட்டமாகப் பழிவாங்கும் படலம் தொடராமல் தடுக்க கோபாலசமுத்திரம் பகுதியில் எட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர்.
வலிப்பு ஏற்பட்டு காவலர் உயிரிழப்பு
தொடர்ந்து 24 மணி நேரமும் கோபாலசமுத்திரம் பகுதியில் காவலர்கள் முகாமிட்டுத் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தற்போது பதற்றம் தணிந்துவருவதால் பிற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்புப் பணியிலிருந்து விலக்கப்பட்டனர்.
இருப்பினும் தொடர்ந்து கோபாலசமுத்திரம் பகுதியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் காவலர்கள் இரவு பகலாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். ஒரே பகுதியில் 24 மணி நேரமும் பணிபுரிவதால் அங்குப் பாதுகாப்பில் உள்ள காவலர்களுக்கு ஒருவித மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும் மற்றொரு காவலர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நள்ளிரவு சைக்கிளில் எஸ்பி ரோந்து
எனவே காவலர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கவும் அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தவும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நாள்தோறும் இரவு நேரங்களில் கோபாலசமுத்திரம் பகுதிக்கு நேரில் சென்று பாதுகாப்பில் ஈடுபடும் காவலர்களைச் சந்தித்துப் பேசிவருகிறார்.
இந்தச் சூழ்நிலையில் காவலர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேற்று (செப்டம்பர் 29) நள்ளிரவு திடீரென சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அவர் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று ஆங்காங்கே பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்களுக்குப் பாதுகாப்புப் பணியில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறைப்படி வந்து சேருகின்றனவா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
காவலர்களுக்குப் புத்துணர்ச்சி
மேலும் காவலர்களிடம் அவர் பேசுகையில், 'அருகில் ஆறு உள்ளது, அங்கே சென்று காலையில் குளியுங்கள். நேரம் கிடைக்கும்போது ஜாலியாக இருங்கள்' என்று அவர்களை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து அங்கிருந்த காவல் அலுவலர்களிடம் மணிவண்ணன் பாதுகாப்பு விவரங்களைக் கேட்டறிந்தார்.
காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனின் இந்த நடவடிக்கையால் கோபாலசமுத்திரம் பகுதியில் சுமார் 18 நாள்களாகத் தொடர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு ஒருவித புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாதி மோதல்... பழிக்குப்பழி... தொடர் கொலை: 8 எஸ்.பி.க்கள் குவிப்பு - நெல்லையில் திக்... திக்...