தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நூறு ஆண்டு கனவு நிறைவேறியது: காணி மக்களுக்கு பட்டா கிடைத்ததால் மகிழ்ச்சி - tirbe

100 ஆண்டுகளுக்கு மேலாக காணி மக்கள் பட்டா இல்லாமல் தவித்து வந்த நிலையில் அவர்களுக்கு தற்போது பட்டா கிடைத்துள்ளதால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நூறு ஆண்டு கனவு நிறைவேறியது: காணி மக்களுக்கு பட்டா கிடைத்ததால் மகிழ்ச்சி
நூறு ஆண்டு கனவு நிறைவேறியது: காணி மக்களுக்கு பட்டா கிடைத்ததால் மகிழ்ச்சி

By

Published : Sep 8, 2022, 9:25 PM IST

திருநெல்வேலி: மேற்கு தொடர்ச்சி மலையில் காரையாறு அணையை ஒட்டி அகஸ்தியர் காலனி சின்ன மைலார் பெரிய மைலார் இஞ்சிக்குழி சேர்வலாறு ஆகிய இடங்களில் 158 குடும்பங்களை சேர்ந்த 442 காணி பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குறிப்பாக 100 ஆண்டுகளுக்கு மேலாக இம்மக்கள் பட்டா இல்லாமல் ஒருவித பயத்துடனையே வாழ்ந்து வருகின்றனர். பட்டா இல்லாததால் வன பாதுகாப்பு என்ற பெயரில் அரசு தங்களை வெளியேற்றி விடுமோ என்ற அச்சத்தில் இருந்து வந்தனர். மேலும் பட்டா இல்லாததால் வீடு கட்ட வங்கியில் கடன் வாங்குவது உள்பட பல விஷயங்களில் சிரமப்பட்டனர்.

இந்த சூழலில் தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற விஷ்ணு காணி மக்களை சந்தித்தபோது பட்டா குறித்த தங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தரும்படி கோரினர் இயற்கை மீதும் இயற்கை சார்ந்த வாழ்வியல் மீதும் அதிக அக்கறை கொண்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, காணி மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

இறுதியாக அனைத்து பணிகளும் முடிந்து பட்டா தயாராக இருந்த நிலையில் முதலமைச்சர் கையால் அதை வழங்க ஆட்சியர் முடிவு செய்தார். அதன்படி நெல்லையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் கையால் முதற்கட்டமாக 78 காணி பழங்குடி மக்களுக்கு தனி நபர் பட்டா வழங்கப்பட்டது.

காணி மக்களுக்கு பட்டா கிடைத்ததால் மகிழ்ச்சி

இதனால் அம்மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இது குறித்து காணி பழங்குடியைச் சேர்ந்த வேல்சாமி கூறுகையில், ”பட்டா இல்லாததால் எங்கள் வாழ்க்கை இருளாக இருந்தது தற்போது அரசு எங்களுக்கு பட்டா கொடுத்திருப்பதால் வாழ்வில் வெளிச்சம் கிடைத்துள்ளது. எனவே அரசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:மாயாஜாலுக்கு வழங்கப்பட்ட இரண்டு ஏக்கர் நிலத்திற்கான பட்டா ரத்து.. உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details