மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல என்பதை விளக்குவதற்காக தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளை சந்தித்து பாஜக தலைவர்கள் கூட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, விவசாயிகளை சந்திப்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி சென்றார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கான வருவாய் இரட்டிப்பாகும். விளை பொருள்களுக்களை சந்தைபடுத்தும் போது விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர். அவர்கள் நஷ்டமடைவதை தடுக்கவே வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இடைத்தரகர்களை ஒழிக்கவேண்டும், விவசாயிகள் விரும்பும் தொகை அவர்களது பொருளுக்கு கிடைக்க எற்பாடு செய்யவேண்டும் என்பதற்காகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.