திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்தவர் அன்பு. இவர் தனது தாத்தா பெயரில் உள்ள சொத்துக்கு பட்டா பெறுவதற்காக மானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் துணை வட்டாட்சியர் மாரியப்பனை அணுகியுள்ளார்.
அப்போது, ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் பட்டா கொடுப்பதாக துணை வட்டாட்சியர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க மனமில்லாத அன்பு, திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.
காவல் துறையினர் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் கொடுத்த பணத்தை துணை வட்டாட்சியர் மாரியப்பனிடம் இன்று (செப்டம்பர் 15) அன்பு கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், காவல் துறையினர் மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது போன்று வேறு நபர்களிடம் லஞ்சம் வாங்கினாரா என்பது குறித்தும் அவரது சொத்து விவரங்கள் குறித்தும் காவல் துறையினர் தற்போது விசாரணை செய்து வருகின்றனர். பட்டா வழங்க லஞ்சம் கேட்ட துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.