திருநெல்வேலி: நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பரப்புரை மேற்கொண்டார்.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஸ்டாலின் பேசிய பரப்புரை, காணொளி மூலம் ஒளிபரப்பப்பட்டது. இதில் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதில் அவர் பேசுகையில், "10 ஆண்டுகளில் அதிமுக செய்யமுடியாத சாதனையை ஆட்சிக்கு வந்த 9 மாதத்தில் திமுக செய்துள்ளது.
பச்சை பொய் பழனிசாமி
ஆனால், திமுக எதுவும் செய்யவில்லை என்று எதிர்கட்சி தலைவர் பழனிசாமி பேசி வருகிறார். அவர் ஒரு பச்சை பொய் பழனிசாமி. திமுக ஆட்சியில் என்ன செய்தோம் என மக்களை களத்தில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி கேட்கட்டும். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என பொத்தாம் பொதுவாக சொல்லாமல் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறோம். அதிமுக ஆட்சியில் பரமக்குடி துப்பாக்கி சூடு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, சாத்தான்குளம் படுகொலை என பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன.
காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய் துறை கட்டுப்பாட்டில் எடுத்து இயக்கக்கூடிய நிலை அதிமுக ஆட்சியில் நடந்தது. அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளை ஆகியவை செய்தித்தாள்களில் தலைப்புகளாக இருந்தது.
ஜெயலலிதா மரணம்: உண்மை வெளிவரும்
தமிழ்நாடு அரசின் தலைமை பீடமான தலைமைச் செயலகத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது அதிமுக ஆட்சியில்தான். தலைமைச் செயலகத்தில் சோதனை நடந்தது வரலாற்றில் அழிக்கமுடியாத கரையாக மாறியது.
ஹாலிவுட் படத்திற்கு இணையாக இருக்கிறது கொடநாட்டில் நடந்த சம்பவம். ஜெயலலிதா மறைந்த நள்ளிரவில் கொடநாட்டின் ஒன்பதாவது வாயிலில் 11 பேர் கொண்ட கும்பல் கொள்ளை சம்பவம் நிகழ்த்தியது. அப்போது பங்களாவின் காவலாளி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், முடக்கி வைத்த நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் செயல்படப்போகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் விலகி, விரைவில் உண்மை வெளிவரும்.