நெல்லை: செல்ஃபி மோகத்தில் ரயில் மீது ஏறிய சிறுவன் மீது உயர் மின் அழுத்த கம்பி உரசியதில் கண்ணிமைக்கும் நேரத்தில் உடல் கருகி உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலில் ஏறி செல்ஃபி எடுத்த சிறுவன் உடல் கருகி பலி! - selfie death
12:29 November 19
ரயிலில் ஏறி செல்ஃபி எடுத்த சிறுவன் உடல் கருகி பலி!
தாழையூத்து சர்ச் நகரை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவர் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தர மதிப்பீட்டு அலுவலராக பணிபுரிந்து வருகிறார். மகேஷ்குமார் இன்று தனது 14 வயது மகன் ஜானேஸ்வரை, வேலைபார்க்கும் இடத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது ரயில் நிலையம் அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஜானேஸ்வர், ஆர்வ மிகுதியில் நான்காவது நடைமேடையில் நின்று கொண்டிருந்த ரயில் மீது ஏறியுள்ளார்.
ரயில் இன்ஜின் மீது நின்றபடி ஜானேஸ்வர் தனது செல்ஃபோனில் செல்ஃபி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத வகையில் சிறுவனின் கை, மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பியில் உரசியது. அடுத்த நொடியே மின்சாரம் தாக்கி தரையில் தூக்கி வீசப்பட்டு சிறுவன் உடல் கருகி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இதைக்கண்டு ரயில்வே பாதுகாப்பு காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிறுவனின் உடலை மீட்டு கூராய்விற்காக பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து சிறுவனின் தந்தை மகேஷ்குமார் அதிர்ச்சியில் உறைந்து போனார். பாதுகாப்பை மீறி சிறுவன் எப்படி உள்ளே வந்தான் என்பது குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். நின்றிருந்த ரயில் என்ஜின் மீது ஏறி செல்ஃபி எடுத்து மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பலர் இவ்வாறு ஆபத்தான இடங்களுக்கு சென்று செல்ஃபி மோகத்தில் உயிரை இழந்துள்ள நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள் தொடராமல் தடுக்க, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு உரிய ஆலோசனை வழங்க அரசுக்கு பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: போதை தலைக்கேறி பேருந்தை மறித்த ஆசாமி!