பாஜக தேசிய மகளிர் அணி பொதுச்செயலாளர் விக்டோரியா கவுரி, பாஜக தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் நேற்று (ஜூன் 17) நெல்லையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்
அப்போது விக்டோரியா கவுரி கூறியதாவது; ' பிரதமர் மோடியின் நல்லாட்சி காரணமாக பாஜக இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்துள்ளது. தற்போது கரோனா விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் திணறி வரும் நிலையில், இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிரச்னையைத் திறமையாக கையாண்டு வருகிறது.
நமது நாட்டில் மருத்துவமனை கட்டமைப்பு வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இல்லாத சூழலில், மிகக் குறுகிய காலத்தில் ஆயிரம் முழு கரோனா சிகிச்சை மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஜன்தன் வங்கி கணக்கு தொடங்க சொன்னபோது, எதிர்க் கட்சிகள் உள்பட எல்லோரும் கேலி செய்தார்கள். ஆனால், இந்த கரோனா காலத்தில் எதிர்க்கட்சிகளே வாயடைக்கும் வகையில் விமர்சனம் செய்தவர்களின், வங்கிக் கணக்கில் கூட நிவாரணம் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 20 கோடி பெண்களுக்கு மூன்று முறை, 500 ரூபாய் என இதுவரை 1500 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊழலை ஒழிக்கும் வகையில் ஜன்தன் வங்கிக் கணக்கில் நிவாரணம் மக்களுக்கு நேரடியாக கிடைத்துள்ளது. இதுவரை எட்டு கோடி பெண்கள் ஆண்டுக்கு, மூன்று இலவச கேஸ் சிலிண்டர்கள் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு பாஜக சார்பில் நான்கு லட்சம் குடும்பங்களுக்கு காய்கறி, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய மோடி கிட்கள் கொடுக்கப்பட்டுள்ளன’ என்றார்.
இதனைத் தொடர்ந்து சீனப் பிரச்னையில் மோடி அமைதியாக இருப்பதாகவும்; அவர் ஒழிந்திருப்பதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ' ராகுல் காந்திக்கு என்ன பேசுவது என்றே தெரியாது. போர் முடிவு செய்வது எளிது. ஆனால், போர் நடத்துவதை இரண்டு நாட்டுத் தலைவர்களுமே விரும்ப மாட்டார்கள். இதை நாங்கள் போராக பார்க்கவில்லை. ஊடுருவலாகத் தான் பார்க்கிறோம்.
அதேசமயம் மோடி அமைதியாக சாதிக்கக் கூடியவர். நாட்டின் பாதுகாப்பு என்பதால் மோடி எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. காங்கிரஸ் தேவையில்லாமல் பொறுப்பில்லாமல் பேசுவது வழக்கம் தான்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.