சட்டப்பேரவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியை பாஜகவிடம் தாரை வார்த்ததால், திமுக அமைச்சரவையில் திருநெல்வேலியை ஒதுக்கி வைத்துவிட்டதாக உள்ளூர் திமுகவில் கூப்பாடுகள் எழுந்தன. அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக, சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு, அப்பாவு போட்டியிடுவார் என திமுக தலைமை நேற்று (மே 10) அறிவித்தது.
நடைபெற்று முடிந்த தேர்தலில், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பெரிய வெற்றி ஏதும் திமுகவுக்கு கிடைக்கவில்லை. திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் போட்டியிட்ட திமுக சீனியர்களான ஏ.எல்.எஸ் லட்சுமணன், ஆவுடையப்பன் ஆகியோரும் தோல்வியைத் தழுவினர்.
கருணாநிதியின் ஆட்சியில் அமைச்சராக இருந்த முன்னாள் பாளையங்கோட்டை எம்எல்ஏ மைதீன் கானோ, இம்முறை களமிறங்கவில்லை. அவருக்குப் பதிலாக பாளையங்கோட்டையில் திருநெல்வேலி திமுக மாவட்டச் செயலாளரான அப்துல் வகாப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆனால், அவர் முதல்முறை எம்எல்ஏ ஆகியிருப்பதால், அமைச்சரவையில் அவருக்கும் இடமில்லை.
அப்பாவுவை சபாநாயகர் பதவிக்கு முன்மொழிந்த ஸ்டாலின் எஞ்சியிருந்தது ராதாபுரம் எம்எல்ஏ அப்பாவு தான். எனவே, அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த சூழலில் சட்டப்பேரவைத் தலைவராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேரிக்காட்டிலிருந்து கோட்டை வரை:
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர் என்று பொதுப்படையாக அறியப்பட்டாலும், பள்ளி ஆசிரியர், எளிமையானவர், உழைப்பாளி, மக்களுக்கு நெருக்கமானவர் என தொகுதியில் அவரின் முகம் வேறு.
அப்பாவுவின் தொகுதியில் தொண்டர்கள் புடை சூழ வாக்கு சேகரித்தபோது... செல்லபாண்டியன், சி.பா.ஆதித்தனார், பி.ஹெச்.பாண்டியன், ஆவுடையப்பன் ஆகியோருக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து ஐந்தாவது சபாநாயகராகத் தேர்வாகியுள்ளார், அப்பாவு.
அப்பாவு பாரம்பரிய திமுக உறுப்பினர் இல்லை. காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 1996ஆம் ஆண்டு ராதாபுரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்னர், தமாகாவிலிருந்து வெளியேறி 2001 தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டார்.
இதனையடுத்து அவர் 2006ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். கட்சியில் இணைந்த அவருக்கு அதே ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.
வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட அப்பாவு, ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதன் பின் நடந்த தேர்தலில் வாய்ப்பை இழந்த அப்பாவு, 2016ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ராதாபுரத்தில் திமுக சார்பில் களமிறங்கினார்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரையை வீழ்த்தும் நிலையில் இருந்தார், அப்பாவு. ஆனால், வாக்கு எண்ணிக்கை முடிவில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வென்றதாக அறிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அப்பாவு, தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டுமென்ற கோரிக்கையை வைக்க, அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்திலிருந்த காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி அவரை வெளியே தள்ளினார்கள்.
அசராத அப்பாவு, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிமன்றம் சென்றார். சென்னை உயர் நீதிமன்றம் 2019ஆம் ஆண்டு ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டது. அதன் பெயரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. ஆனால், அதிமுக எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டிற்கு சென்றதால், தற்போது வரை அந்த முடிவு வெளியிடப்படவில்லை.
இருந்தாலும் ராதாபுரத்தில் மீண்டும் களமிறங்கி வென்று, நீதியை மக்கள் எப்போதும் மறப்பதில்லை என்று நிரூபித்திருக்கிறார், அப்பாவு. சென்ற தேர்தலில் வெற்றிக்கு நெருக்கத்தில் சென்று சில சூழ்ச்சிகளால் கோட்டைக்குள் நுழையமுடியாத அவர், இந்த முறை பேரவைத் தலைவராக கோட்டைக்குள் நுழைந்து தேரிக்காட்டின் வெக்கை நிறைந்த நெல்லை தமிழில், சட்டப்பேரவையை வழி நடத்தவிருக்கிறார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு