திருநெல்வேலி மேலப்பாளையம் அருகே உள்ள முன்னீர்பள்ளம் மருதநகரைச்சேர்ந்த 17 வயது மாணவன் பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரின் தந்தை ஜெகதீஷ் வெளிநாட்டில் வேலை பார்த்துவருகிறார். இன்று காலை மாணவன் வழக்கம்போல் பள்ளிக்குச்செல்வதாக தனது தாயிடம் தெரிவித்து விட்டு வெளியே சென்றுள்ளார்.
இதற்கிடையில் மருதநகர் ரயில்வே கேட் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஒரு சிறுவன் உடல் துண்டான நிலையில் கிடப்பதாக காவல் துறையினருக்குத்தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து முன்னீர்பள்ளம் காவல் துறையினர் மற்றும் ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அது ஜெகதீஷின் மகன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து சிறுவனின் சடலத்தை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் மாணவன் செல்போனுக்கு அடிமையாகி இருந்ததாகவும், எனவே பெற்றோர் செல்போன் கொடுக்காததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.