சேலம் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனமான சேலம் இரும்பு உருக்காலையை மத்திய அரசு தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி உருக்காலை தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 35ஆவது நாளாக நடக்கும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களை பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் இன்று நேரில் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘சேலம் உருக்காலை குறித்து மத்திய எஃகு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசியுள்ளேன். அப்போது அவர் சேலம் உருக்காலையை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்’ என்றார்.
வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பு தொடர்ந்து பேசிய அவர், மூல பொருட்கள் விலையை குறைத்து நட்டத்தை குறைக்கவும், விற்பனை பிரிவை தனியாக பிரிக்கவும், தொழிலாளர்களுக்கு ஏற்படும் வேலை இழப்பை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உருக்காலை நிர்வாகத்தில் ஊழல் நடந்துள்ளதாக தொழிற்சங்கம் கூறும் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று கூறினார்.
பின்னர், ஆலை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்றும், அதை ஒருபோதும் தனியார்மையமாக்கி விடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், கேந்திர வித்தியாலயா பிரச்னை குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்று கூறினார்.