சேலம்:மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒரு பொம்மை அரசு என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பேசினார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மக்கள் விரோத திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது.
அதன்படி இன்று (டிசம்பர் 17) அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
விடியாத அரசு
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து எதிர்க்கட்சித் தலைவரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டன உரை ஆற்றினார். அப்போது அவர், "திமுக ஆட்சி பொறுப்பேற்று ஏழு மாதங்களாகின்றன. தேர்தல் வாக்குறுதிகளாக 525 வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு ஒருசில வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.
முக்கிய வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி, இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், முதியோர் உதவித்தொகை உயர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, சுய உதவிக் குழுக்களுக்கு தேசிய வங்கிகளில் கடன் தள்ளுபடி போன்ற எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
மக்களின் பிரதான பிரச்சினையான பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை திமுக அரசு கட்டுப்படுத்தவில்லை. தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதிகளை அளித்துவிட்டு, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து விடியாத அரசாக திமுக அரசு செயல்பட்டுவருகிறது.
ஸ்டாலின் பொம்மை முதலமைச்சர்