சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வடகுமரை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரின் மகன் சுபாஷ் சந்திர போஸ் (19) கடந்த 2019 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்துள்ளார்.
மாணவர் சுபாஷ், கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வை எழுதி வெற்றி பெறுவதற்காக முயற்சி செய்து வந்துள்ளார். முதல் முறை நீட்தேர்வில் 158 மதிப்பெண்கள் பெற்ற அவர், அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் 261 மதிப்பெண்கள் பெற்றார்.
மாணவர் சுபாஸ் சந்திர போஸ் தற்கொலைக்கு முயற்சி
முன்னதாக, அவர் மதிப்பெண் குறைந்ததால் ஏற்பட்ட மனஉளச்சல் காரணமாக தற்கொலைக்கு முயன்றார் என கூறப்பட்டது. இந்நிலையில், சுபாஷ் சந்திர போஸ் இரண்டாவது முறையாக எழுதிய நீட் தேர்வின் முடிவு வெளி வருவதற்கு முன்பாகவே, எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தால், நவம்பர் 1ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
விஷம் குடித்து மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்த மாணவர் சுபாஷ் சந்திர போஸை மீட்ட அவரின் பெற்றோர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
முற்றுப்புள்ளி எப்போது?...
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (நவ. 6) அதிகாலை சுபாஷ் சந்திர போஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது மாணவரின் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வில் மேற்கொள்ளப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சுபாஷ் சந்திர போஸின் உறவினர்கள் கூறுகையில்,"பரீட்சையில் வெற்றிபெற்று விடுவார் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை.
சோகத்தில் ஆழ்ந்த மாணவரின் குடும்பத்தினர் மாணவர்கள் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
இதற்குமுன், நீட் தேர்வு பயத்தால் சேலம் மேட்டூர் அருகே தனுஷ் என்ற மாணவர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது, சேலத்தில் மேலும் ஒரு மாணவர் தேர்வு முடிவு வருவதற்கு முன்பாகவே தற்கொலைக்கு முயன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தொடரும் நீட் மரணங்கள்: மதிப்பெண் குறைவால் மாணவர் தற்கொலை