சேலம் மாவட்டம் காரியப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவர் மீது பல்வேறு கொலை மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தற்காப்புக்காக பிரபல ரவுடியை சுட்டுக்கொன்ற போலீசார்! - சேலம் காரியப்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி கதிர்வேல்
2019-05-02 11:50:50
சேலம்: காரியப்பட்டியைச் சேர்ந்த பிரபல ரவுடி கதிர்வேல் கத்தியை வைத்து தாக்க முயன்றபோது, தற்காப்புக்காக காவல் துறையினர் அவரை சுட்டுக் கொன்றனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த முறுக்கு வியாபாரி கணேசன் என்பவரை கொலை செய்த வழக்கில் கதிர்வேல் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு கதிர் வேலை கைது செய்த காரிப்பட்டி காவல் துறையினர் அவரை விசாரணைக்காக கணேசன் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது கதிர்வேல் தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் கால்வாய் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம், உதவி ஆய்வாளர் துரை ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆய்வாளர் சுப்பிரமணியம் கதிர் வேலை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கதிர்வேல் உயிரிழந்தார். இதனிடையே படுகாயமடைந்த காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம், உதவி ஆய்வாளர் துரை ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர் குற்றங்களில் ஈடுபட்டுவந்த ரவுடி கதிர்வேலை காவல் துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.