சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உதவி ஆணையாளர் ஆனந்தகுமார் உள்ளிட்ட காவல் துறையினர் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காவலர்களை தாக்கிய கும்பல்
அப்போது, அதிகாலை 4 மணியளவில் உடையாப்பட்டி நெடுஞ்சாலையில், ஒரு லாரியிலிருந்த மூட்டைகளை மற்றொரு லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த நான்கு பேரை பிடித்து காவல் துறையினர் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது, அந்த நான்கு பேரும் காவல் துறையினரை தள்ளிவிட்டு தப்பி ஓடினர்.
இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர், அங்கிருந்த லாரியை சோதனை செய்தனர். அதில் மாட்டுத் தீவன மூட்டைகள் நடுவே 50க்கும் மேற்பட்ட குட்கா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்த காவல் துறையினர், தப்பி ஓடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் இருக்கும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.