சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில், கொண்டலாம்பட்டி பகுதி கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டம் அப்பகுதிகழக செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "சேலத்தை உலக அளவில் பேசவைத்தவர் எடப்பாடி பழனிசாமி. முதலமைச்சர் செய்யவேண்டிய திட்டங்களை எதிர்க்கட்சி தலைவராக இருந்து எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். இன்றைய தினம்கூட டெல்லி சென்றவர் நடந்தாய்வாழி காவேரி, காவிரி-கோதாவரி திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்வதற்காக போராடினாலும், 7.5 சத உள் ஒதுக்கீடு மூலம் ஏழை அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர் எடப்பாடி பழனிசாமி. சமூக நீதிக்காக திமுக ஒரு துரும்பைகூட கிள்ளிப் போடவில்லை. அனைத்து துறைகளிலும் 69 சதவீத இட ஒதுக்கீடு தந்தவர் ஜெயலலிதா. 2011 முன்பு திமுக ஆட்சியில் முதியோர் உதவித்தொகைக்கு 1200 கோடிதான் வழங்கினார்கள்.
அதிமுக ஆட்சியில் 9 பிரிவுகளுக்கு ஜெயலலிதா 4200 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது ஒரே உத்தரவில் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவிதொகை வழங்க உத்தரவிட்டார். அதிமுக ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி தந்தார். திமுக வந்தால் 1,500 ரூபாய் ஓய்வூதியம் தருவதாக கூறிவிட்டு ஆயிரம் ரூபாயை பறித்துவிட்டு அனைத்தையும் நிறுத்தி விட்டனர்.
அதிமுகவை ஒரு தொண்டன்தான் தலைமை தாங்குவான் என்ற ஜனநாயகத்தை, திமுகவால் கூறமுடியுமா என்று கேள்வி எழுப்பிய அவர், திமுகவில் ஜனநாயகம் இல்லை. வாரிசு அரசியல் நிலைநிறுத்தப்பட்டதால் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இனி அடுத்தடுத்து ஒவ்வொருவராக வெளியேற உள்ளனர். அதிமுகவை வலிமைப்படுத்தும் செயலில் யார் முட்டுக்கட்டை போட்டாலும், அது ஆண்டவனாக இருந்தாலும் அவரை அடையாளப்படுத்தி தூக்கி எறிவது தான் அதிமுகவின் வரலாறு.