சேலம்: அரசு தலைமை மருத்துவமனையில், சுகாதார துறை மற்றும் ரோட்டரி சங்கம் மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 6 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் கொள்கலன் அமைப்பு, ஒன்றிய அரசின் உதவியுடன் அமைக்கப்பட்ட 2 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் கொள்கலன் அமைப்பு ஆகியவற்றை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஆகஸ்ட் 11) திறந்து வைத்தார்.
ஆக்சிஜன் படுக்கை வசதிகள்
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசின் சார்பில் 70 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கொள்கலன் அமைப்புகள் அமைக்கப்படவுள்ளன. இதில், 20 கொள்கலன் அமைப்புகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. தற்போது சேலத்தில் 21ஆவது மருத்துவமனையாக கொள்கலன் அமைப்பு திறக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதை கருத்தில் கொண்டு சேலம் அரசு மருத்துவமனையிலுள்ள ஆயிரத்து 462 படுக்கைகளும் ஆக்சிஜன் வசதி கொண்டதாக மாற்றப்பட்டது.
மூன்றாவது அலை அச்சுறுத்தல் இருப்பதால் சேலம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வசதிகள் மருத்துவ கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எனவே மூன்றாவது அலை குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கரோனா விழிப்புணர்வு
தமிழ்நாட்டில் மூன்றாவது அலை இதுவரை வரவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கரோனா விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஒரு வார காலத்திற்குப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசின் அனைத்து துறைகளும் வேகமாக இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில், திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது நாளொன்றுக்கு 230 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. கரோனா 2ஆவது அலையின் தாக்கம் அதிகமாக இருந்த மே 2ஆவது வாரத்தில் 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்டது.
தற்போது கரோனா மூன்றாவது அலை வந்தால் கூட அதை எதிர்கொள்ளும் வகையில் ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு போதிய ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய குறைபாடு ஏதுமில்லை. அவுட்சோர்சிங் முறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் குறைவாக வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
கரோனா தடுப்பூசிகள்
இதுபோன்ற ஒப்பந்த முறையை முழுமையாக ரத்து செய்து வருகிறோம். இதன் மூலம் தனிநபர் மட்டுமே சம்பாதித்து வருகின்றனர். இந்த முறையை ரத்து செய்து அனைத்து மருத்துவமனைகளிலும் வரும் காலங்களில் நேரடி நியமனம் ஏற்படுத்த உள்ளோம்.
தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு எங்கும் இல்லை. கடந்த ஜூலை மாதத்திற்கு ஒன்றிய அரசிடமிருந்து 72 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதை முழுமையாக பொதுமக்களுக்கு செலுத்தியதை பாராட்டும் விதமாக ஒன்றிய அரசு கூடுதலாக 19 லட்சம் தடுப்பூசிகளை வழங்கியது. ஆகஸ்ட் மாதத்திற்கு 79 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை 2கோடிய 53லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது." என்றார்.
இதையும் படிங்க: அமைச்சரின் சகோதரர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு