தருமபுரி:சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி லாரி முழுவதுமாக எரிந்து சேதமானது.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் கட்டமேடு என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனையடுத்து லாரியில் இருந்த இரண்டு ஓட்டுநர்களும் லாரியை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு தப்பியோடினர். லாரி தீப்பற்றி எரிவதைக் கண்ட வாகன ஓட்டிகள் தொப்பூர் காவல் நிலையத்திற்கு தகவலளித்தனர்.
அங்கிருந்து விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த லாரியை தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். லாரி தீப்பிடித்து எரிந்ததால் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியிலிருந்து பவுடரை ஏற்றிக்கொண்டு ஓட்டுநர் லாரியை கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதிக்கு சென்றதாகவும், என்ஜினில் திடீரென புகை வந்ததால் லாரி ஓட்டுநர்கள் சாலையின் ஓரம் லாரியை நிறுத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது.