சேலம் ஜங்சன் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் அதே பகுதியில் ஐஸ்கீரிம் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் ஆசாத் நகர் பகுதியை சேர்ந்த ஷரீன் சித்தாரா பானு(25) என்ற பெண் கடந்த ஆறு மாதமாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலையில் வழக்கம் போல் கடையை திறந்து பானுவை வியாபாரம் செய்ய சொல்லி விட்டு சொந்த வேலை காரணமாக பாண்டியராஜன் வெளியில் சென்றுள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த போது கடையின் ஷட்டர் உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதை பார்த்த பாண்டியராஜன் வெகுநேரமாகியும் ஷட்டர் திறக்கப்படாததால் சந்தேகமடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஷட்டரை உடைத்து திறந்து பார்த்த போது ஷரீன் சித்தாரா பானு ரத்த வெள்ளத்திலும், முதியவர் ஒருவர் தூக்கிட்ட நிலையிலும் இறந்து கிடந்தனர்.
இரு சடலங்களையும் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்த ஷரீன் சித்தாராவுக்கும், அதேபகுதியைச் சேர்ந்த இனாமுல்லா (54) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த இருவரின் குடும்பத்தினரும் உறவை கைவிடும்படி கடுமையாக எச்சரித்துள்ளனர்.
தகாத உறவினால் விபரீதம்: இளம்பெண் கழுத்தறுத்து படுகொலை! இந்நிலையில் இன்று காலை ஷரீன் சித்தாரா பானு வேலைசெய்யும் கடைக்கு இனாமுல்லா வந்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாத்தில், ஆத்திரமடைந்த இனாமுல்லா கத்தியால் ஷரீன் சித்தாராவின் கழுத்தை அறுத்துவிட்டு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் அங்கு இனாமுல்லா எழுதிய 9 பக்க கடிதம் சிக்கியுள்ளது. அதில் இந்தக் கொலைக்கும், தற்கொலைக்கும் நானே பொறுப்பு என்று எழுதப்பட்டிருந்தது. இதன் மூலம் இனாமுல்லா திட்டமிட்டு இளம்பெண்ணை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.