சேலத்தில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்ற ராதாகிருஷ்ணன், பிரசவ வார்டு, தீவிர அறுவை சிகிச்சை பிரிவுகளில் இருந்த நோயாளிகளிடம், அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், கரோனா சிகிச்சை மையம், அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவு, மருந்துக் கிடங்கு, ஆய்வகம் உள்ளிட்டவற்றிற்கும் சென்று ஆய்வு செய்த அவர், தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். ” தமிழகத்தில் கரோனோ பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அரசு மருத்துவமனையில் 75 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் ஆயிரத்து நூறு பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதில் இறப்பு 1 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அதேபோல் நோய்த்தொற்றும் 2 சதவீதமாக குறைந்துள்ளது. அதையும் ஜீரோவாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் தொடர்புடைய தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.