சேலம்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் மின் உற்பத்தி பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் மூலம் 840 மெகாவாட்டும் , இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட மற்றொரு பிரிவும் செயல்பட்டு வருகிறது.
இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இன்று (மே.18) அதிகாலை மேட்டூர் அனல் மின் நிலைய முதல் யூனிட்டான 840 மெகாவாட் நிலையத்தில் உள்ள கன்வேயர் பெல்ட் பகுதியில் உராய்வு காரணமாக தீப்பற்றியது. பின்னர் தீ மளமளவென பரவி கன்வேயர் பெல்ட் முழுவதும் பற்றிக் கொண்டது. இதுகுறித்து தகவலறிந்த மேட்டூர் அனல்மின் நிலைய தீயணைப்பு படையினரும், ஊழியர்களும் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.