தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'எடப்பாடி அதிமுக எஃகு கோட்டை' ஒட்டுமொத்த திமுகவும் பரப்புரை செய்தாலும் வெற்றி பெறாது' முதலமைச்சர்

சேலம்: எடப்பாடி அதிமுக எஃகு கோட்டை, கனிமொழி அல்ல தி.மு.க.,வின் ஒட்டுமொத்த தலைவர்களும் எடப்பாடியில் வந்து பரப்புரை செய்தாலும் வெற்றிபெறாது என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

EPS starts Assembly election campaign in salem
EPS starts Assembly election campaign in salem

By

Published : Dec 19, 2020, 2:33 PM IST

Updated : Dec 19, 2020, 3:47 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் பெரிய சோரகையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான(2021) பரப்புரையை இன்று(டிச.19) தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது," தமிழ்நாட்டை 36 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சி செய்துள்ளது. மறைந்த முதலமைச்சர்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களை அடுத்து, எனது தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.

நான்கு ஆண்டுகள் நிறைவு செய்த அதிமுக

ஓராண்டு கூட ஆட்சியை நடத்த முடியாது எனக் கூறிய எதிர்க்கட்சிகள் மத்தியில், நான்கு ஆண்டு தொடர்ந்து சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு சோதனைகளை சந்தித்து ஆட்சி நிறைவு செய்யவுள்ளோம்.

குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்காமல் பல சோதனைகளை கடந்து வந்தோம். அதற்குப் பின்பு புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றத்தால் பெரியளவில் தமிழகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. அத்தனை பிரச்சனைகளையும், அரசு துரித நடவடிக்கை எடுத்து சரி செய்தது. இந்தியளவில் சிறப்பான நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் நிவாரணம் வழங்கிய அரசு அதிமுக.

நடப்பாண்டு(2020) மார்ச் பரவ தொடங்கிய கரோனா வைரசானது, இன்று வரை இருந்து வருகிறது. கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத்துறை மருத்துவ நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை எடுத்துக் கொண்டு, தமிழ்நாடு அரசு சிறப்பான முறையில் கரோனா வைரசைக் கட்டுப்படுத்திள்ளது.

தமிழகத்தைப் பாராட்டிய பிரதமர்

மற்ற மாநிலத்தை விட, படிப்படியாக தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் சென்று ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு அரசின் நிர்வாகமும், சுகாதாரத் துறையும் சிறப்பாக செயலாற்றியதால், கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட த்தில் கரோனா வைரஸ் குறித்து கேட்டபோது, இரண்டு நாட்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட தொற்று இல்லை என, அலுவலர்கள் தெரிவித்தனர்.

நீண்ட நாள் நாம் எடுத்துக்கொண்ட பணிகளுக்கு கிடைத்த பலன். பிரதமர், ஒவ்வொரு மாநிலத்திலும் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அப்போது மாநிலத்தில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றைச் சிறப்பாக கட்டுப்படுத்துகிறார்கள் என, பிரதமர் தெரிவித்தார்.

அரசை விமர்ச்சிக்கும் ஸ்டாலின்

இந்தியாவில் மற்ற மாநிலத்தைக் காட்டிலும், தமிழ்நாடு அரசு சரியான முறையில் கரோனா வைரஸ் தடுப்பு வழிகளை மேற்கொண்டதன் விளைவாக, அந்த நோய் பரவல் குறைந்து இருக்கிறது என்றார்.

தமிழ்நாட்டில் கட்டுப்படுத்துவது போல் மற்ற மாநில அரசுகளும் அதைப் பின்பற்றி, வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும், அப்போது பிரதமர் வலியுறுத்தினார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் கடுமையாக அரசை விமர்சனம் செய்து வருகிறார். நாட்டு மக்களுக்கு பெரிய அளவில் நல்லது நடக்கும் செயலை அதிமுக அரசு செய்து வருகிறது. இருப்பினும் அதற்கு மாற்றாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார்.

உள்ளாட்சித் துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை தமிழ்நாடு அரசு வாங்கியுள்ளது. நீர் மேலாண்மை மேற்கொண்டதன் காரணமாக, மாநிலம் முழுவதும் அனைத்து ஏரிகளும் குடிமராமத்து பணிகள் மூலம் தூர்வாரப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தில் நீர் சேமிப்பு அதிகரித்துள்ளது. மழைக்காலங்களில் மழை நீரை நதிகளில் இருந்து சேமித்து, நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.406 கோடியில் புதிய கதவணை கட்ட மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.

தேசிய விருது பெற்ற தமிழ்நாடு

நீர் மேலாண்மையை சரியாக செயல்படுத்தும் பணியில் மாநில அரசு முழுவீச்சில் செயல்பட்டு, நீர் மேலாண்மையில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது. இந்தியாவில் உபரி மின்சாரம் செய்யும் மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மின் மிகை மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்துள்ளது. உலகத்தில் உள்ள மற்ற பெரு நிறுவனங்கள் தமிழகத்தைத் தேர்ந்தெடுத்து தொழில் தொடங்க முன்வந்துள்ளனர்.

304 தொழிற்சாலைகள் அமைக்க இதுவரை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் காலத்தில் கூட தமிழகத்தில் மட்டும்தான் தொழில் தொடங்க தொழிலதிபர்கள் முன்வந்தனர். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதில் அரசு முக்கியப் பங்கு வகிக்கிறது. வேளாண்மைத் துறையில் வரலாற்று சாதனையை அரசு பெற்றுள்ளது. அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் பல லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

மாநிலத்தில் 34 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கல்வியில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உயர்கல்வி படிப்பவர்கள் சதவீதம் 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. சுகாதாரமான குடிநீர் கிடைக்க நங்கவல்லி கூட்டுக் குடிநீர் திட்டத்தை எடப்பாடி தொகுதியில் செயலாற்றி வருகிறோம். பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

எடப்பாடி தொகுதி உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மக்கள் தேவைகளுக்கு ஏற்ப ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்டு, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கால்நடை மருத்துவம், கல்லூரி, நெசவுக்தொழில்களை மேம்படுத்த பெங்களூரு வரை பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 15 பேருந்துகள் விடப்பட்டன.

எடப்பாடிஅதிமுகவின் எஃகு கோட்டை

பள்ளிகள், சமுதாயக்கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. எடப்பாடி தொகுதி, அதிமுகவின் எஃகு கோட்டை. இதுவரை திமுக வெற்றி பெறாத தொகுதியாக எடப்பாடி தொகுதி உள்ளது. கனிமொழி எடப்பாடி வந்தபொழுது அதிமுக அரசு ஒன்றும் செய்யவில்லை என பேசி இருக்கிறார். வேண்டும் என்றால் அவரை இங்கு வந்து போட்டியிட சொல்லுங்கள்.

யார் வெற்றி பெறுவார்கள் என பார்க்கலாம். எடப்பாடி தொகுதியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும், அதிக இடங்களில் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. தன்னை பழனிசாமி என தற்போது அதிகம் அழைப்பதில்லை எடப்பாடியார் என மக்கள் அன்போடு அழைக்கின்றனர். மக்களுக்கு சிறப்பான பங்கை அளித்து, அதன் காரணமாக இந்தப் பெயரை எனக்கு மக்கள் அளித்துள்ளனர்.

நான் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு வரை படித்தேன். மாணவர்களின் எண்ணங்களை நன்கு அறிந்ததால் மாணவர்களுக்குத் தேவைப்பட்ட திட்டங்களை வகுத்து வருகிறேன். அரசு பள்ளியில் படிக்கும் 41 விழுக்காடு மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியுள்ள அரசு அதிமுக அரசு. மருத்துவ மாணவர்களின் கனவை நனவாக்கிய அரசு அதிமுக அரசு.

சேலம் மாவட்டத்தில் மட்டும் 26 பேர் மருத்துவ மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் ஆறு இடங்களில் மருத்துவக் கல்லூரியில் கிடைத்தது. அரசு இப்பிரச்சனையில் கூர்ந்து கவனித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதுவரை 313 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். அதேபோல் பல் மருத்துவக் கல்லூரியிலும் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. ஏழை மாணவர்கள் எண்ணற்றோர் இன்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் சூழலை அதிமுக அரசு உருவாக்கியுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது, இந்தப் பகுதியில் ஒரு கோரிக்கையை வைத்தார்கள். இந்த பகுதியில் இருக்கக்கூடிய ஏரிகளை தூர்வாரி செம்மைப்படுத்த வேண்டும் என கோரியிருந்தனர். தற்போது வறண்ட 100 ஏரிகளை தண்ணீர் நிரப்பும் புதிய திட்டம் கொண்டு வந்துள்ளது. எடப்பாடி தொகுதியில் மக்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக வெற்றி பெறாது

தேசிய நெடுஞ்சாலை மாநில சாலைகள் உள்ளாட்சி சாலைகள் என அனைத்தும் தார் சாலைகள் தரமாக அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதி சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. மருத்துவ வசதி, கல்வி கல்லூரி, கால்நடை மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. வயது முதிர்ந்தவர்கள் முதியோர் உதவித்தொகை கேட்டபொழுது அனைவருக்கும் முதியோர் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் முதலமைச்சர் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமை அதிகாரிகள் மக்களை தேடிச் சென்று குறைகளை கேட்கும் அளவிற்கு சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி உள்ளேன். அதில் அதிகமாக தகுதியுள்ள அனைவருக்கும் பட்டா மாறுதல் பட்டா உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் மற்றும் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் பலருக்கு வீடு வழங்கி உள்ளோம்.

கனிமொழி அல்ல, ஒட்டுமொத்த திமுக தலைவர்களும் எடப்பாடிக்கு வந்து பரப்புரை செய்தாலும், திமுக வெற்றிபெறாது. அதிமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசாக உள்ளது. 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற பொது மக்கள் தங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தேடி தர வேண்டும். உழைப்பதற்கு தாங்கள் தயாராக இருக்கிறோம். வாய்ப்பு அளியுங்கள்.

இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.

Last Updated : Dec 19, 2020, 3:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details