சேலம்: நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் தனுஷ் உடலுக்கு, சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கூழையூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் சில ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு முறை நடைபெற்ற நீட் தேர்வுகளில் அவர் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் இன்று நடக்கவிருந்த நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்றுவந்த தனுஷ், இன்றைய நீட் தேர்விலும் தான் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் அதிகாலை தன் வீட்டின் முற்றத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக மேட்டூர் கருமலைக் கூடல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவனின் தற்கொலை சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவன் தனுஷ் உடலுக்கு சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுக சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேரில் சென்று மாணவன் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது மாணவனின் குடும்பத்தினர் கதறி அழுதனர். மாணவன் தனுஷ் நீட் தேர்வுக்காக எடுத்த முயற்சிகள் குறித்து அவரது தந்தை சிவகுமார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கண்ணீர் மல்க விரிவாக எடுத்துரைத்தார்.
சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர்மாலை அணுவித்து அஞ்சலி செலுத்தியபோது அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று தெரிவித்தார்.