சேலம்:தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க முறையான முன்னேற்பாடுகளைச் செய்ய திமுக அரசு தவறி விட்டதால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே உடனடியாக குடியிருப்பு பகுதிகளில் புகுந்து உள்ள மழைநீரை அகற்ற அரசு நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று (நவ.29) சேலம் மாநகர அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
மக்களைப் பாதுகாக்க எந்தவித முன்னேற்பாடும் திமுக அரசு செய்யவில்லை
அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சரியாக உணவு விநியோகம் செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க எந்தவித முன்னேற்பாடும் திமுக அரசு செய்யவில்லை. மழை குறித்து வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து தகவல் தெரிவித்து வருகிறது. முன்னேற்பாடு செய்யாத காரணத்தால் ஆங்காங்கே மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது.