சேலம்:மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கலந்துகொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது ஜி.கே.வாசன் பேசுகையில், "வாக்குறுதி அடிப்படையிலேயே திமுகவுக்கு மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், அந்த வாக்குறுதிகளை நீங்கள் நிறைவேற்றாமல், மக்களுக்கான சுமையை தான் அதிகரிக்கிறீர்கள். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒருநிலைப்பாடு, ஆளுக்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு. இது என்ன திமுகவின் பச்சோந்தி திராவிட மாடலா?.
தமிழ்நாட்டு மக்களை எளிதில் ஏமாற்றி விடமுடியாது. மின்சாரத்துறை நஷ்டமடைவதற்கு ஏழை எளிய மக்களா காரணம். மக்கள் மீது கை நீட்டுவதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். நஷ்டம் கூடாது என்றால் மின்சார தடவாள பொருட்கள் வாங்கும்போது அதில் ஊழல் செய்யக்கூடாது. வெளி மாநிலங்களில் மின்சாரம் கொள்முதல் செய்யும்போது லஞ்சம் வாங்க கூடாது. இந்த பணிகளை முறையாக செய்தால் மின்சாரத்துறை நஷ்டத்தில் செயல்படாது.
தமிழ்நாட்டில் ஊழலுக்கு திமுக திராவிட மாடல், நேர்மைக்கு காமராஜர் மாடல். புது புது யுக்தியில் திராவிட மாடல் என்று மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். தமிழ்நாட்டின் அமைச்சர்களும் அதிகாரிகளும் விளக்கம் கொடுக்கும்போது யாருக்குமே புரியாது. தற்போது நூதனமுறையில் மக்கள் மீது சுமையை வைத்து ஏமாற்ற நினைக்கிறார்கள்.