சேலம்:சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் இன்று (டிசம்பர் 11) நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், சேலம் மாவட்டத்திற்கு புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில்,"சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை வசதி இல்லாத பகுதிகளில் ரூ. 530 கோடி செலவில், 520 கி.மீ., நீளத்திற்கு பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகளும், கழிவுநீர் உந்து நிலையங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகளும் செயல்படுத்தப்படும்.
ரயில்வே மேம்பாலம்
மாநகராட்சிப் பகுதிகளில் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ. 158 கோடி செலவில் கூடுதல் குடிநீர் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். சேலத்தில் உள்ள போடிநாயக்கன்பட்டி ஏரி, மூக்கனேரி, அல்லிக்குட்டை ஏரி போன்ற நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கான பணிகள் ரூ.69 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
அம்மாபேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று ரூ. 120 கோடிசெலவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். மக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக ரூ. 20 கோடி செலவில் ‘மாவட்ட பல்நோக்கு விளையாட்டு அரங்கம்’ அமைக்கப்படும்.