உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், மத்திய அரசின் தேசிய சுகாதார திட்ட கூடுதல் இயக்குநர் யுவராஜ், மாநில சுகாதார திட்ட இயக்குநர் செந்தில் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் ராமன், ” இம்மாதம் முழுவதும் சேலம் மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சுற்று சுவர்களில், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு செய்திகள் அடங்கிய, 413 அடி நீள விளம்பர பேனர் அமைக்கப்பட்டுள்ளது.
அதில், மார்பக புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது, அதனை எவ்வாறு கண்டறிவது, இதற்கான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் என்னென்ன என்பது குறித்தும், இந்நோயினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணமாக்க முடியும் என்பதை அறிவுறுத்தும் விதமாகவும் செய்திகள் இடம்பெற்றுள்ளன.