மதுரை மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் வைகை ஆற்றில் மழை நீர் வரத் தொடங்கியது. யானைக்கல் பகுதியில் உள்ள தடுப்பணைகள் மழைநீரால் நிரம்பிய நிலையில், தண்ணீர் செல்ல வேண்டிய பகுதிகள் முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் இருந்ததால், தரைப்பாலத்தில் தண்ணீர் ஓடத் தொடங்கியது.
மேலும், தடுப்பணையில் உள்ள நீர் முழுவதுமாக நுரை பொங்கி காட்சியளிக்கிறது. வைகை ஆற்றோர பகுதிகளான செல்லூர், மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளிலும் நீர் நுரையுடன் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வைகையில் பொங்கும் நுரை! - மக்கள் அச்சம்! வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பல கோடி ரூபாயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மீண்டும் சாக்கடை நீர் கலப்பதால் நுரை பொங்குகிறதா அல்லது ரசாயனம் ஏதும் கலந்து நுரை வருகிறதா என நீர்நிலை ஆர்வலர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். மழை பெய்து வரும் நிலையில் வைகை ஆற்றைத் தூர்வாருவதுடன், சூழல் மாசுபாடு ஏற்படுவதற்கு முன் ஆற்றில் நுரைகள் நீங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: திருக்கார்த்திகை விழா: பூக்கள் விலை கடும் உயர்வு