சென்னையிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வருகை புரிந்த வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில்,'ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்துக் கட்சி நிர்வாகிகளையும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து மக்களின் நலனை மட்டுமே மையமாகக்கொண்டு திமுக அரசு செயல்படும். கரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் அனைத்துக் கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து செயல்பட உள்ளோம்.
அரசு மருத்துவமனைகள் மட்டுமன்றி, தனியார் மருத்துவமனைகளிலும் பரவல் தடுப்பு மையங்கள் விரிவாக ஏற்பாடு செய்து அதற்குத் தீர்வு காணப்படும்.
மக்கள் நல்வாழ்வுத் துறை, வருவாய்த்துறை, காவல் துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளையும் வரவழைத்து நாளை மறுநாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் ஒன்று நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளோம்.
கரோனா அறிகுறி உள்ளவர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். இதனை நாளை மறுதினம் முதல் பதினைந்து செவிலியர் மூலம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படவுள்ளது.