மதுரை: ராஜபாளையத்தைச் சேர்ந்த மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பாக ராமராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், "ராஜபாளையத்தில் உள்ள வழிவிடு விநாயகர் கோயிலில் 33 ஆண்டுகளாக, மாப்பிள்ளை விநாயகர் மன்றம் சார்பாக விநாயகர் சதுர்த்தி மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவந்தது.
கரோனா தொற்றின் காரணமாக இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாடவும், கூட்டமாக நீர்நிலைகளில் சென்று கரைக்கவும் அனுமதி மறுத்துள்ளது.
வழிவிடு விநாயகர் கோயிலில் ஆறு விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு, அதை ஒவ்வொன்றாக டிராக்டர் மூலம் எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்க வேண்டும்.
மேலும் அரசின் கரோனா தொற்று பாதுகாப்பு, அனைத்துக் கட்டுப்பாடுகளையும் பின்பற்றி முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம். எந்தவித கூட்டமும் சேராமல் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி கோயிலில் உள்ள சிலைகளை மட்டும் எடுத்துச்சென்று கரைப்பதற்கு அனுமதிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. இந்து அறநிலையத் துறை சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், விநாயகர் சதுர்த்தி முடிந்துவிட்டதால் உடனடியாக இந்து அறநிலையத் துறை சார்பாக சிலைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார்.
மனுதாரர் தரப்பில், விநாயகர் சதுர்த்தி முடிந்ததால் சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏதுமில்லை. கரோனா விதிகளைப் பின்பற்றி நாங்களே எடுத்துச் சென்று கரைக்க அனுமதிக்க வேண்டும் என வாதிட்டனர்.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்து அறநிலையத் துறை சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து, தற்போது கரோனா விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், அக்டோபர் ஒன்றாம் தேதி வரை சிலைகள் அங்கே இருக்கட்டும் என்றும் ஒன்றாம் தேதிக்கு மேல் அரசின் சார்பில் தளர்வுகள் விதிக்கப்பட்டால் மனுதாரரின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தார்.