மதுரை: சர்வேயர் காலனியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாசம். இவர் கோ.புதூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அம்மனுவில், ”ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெருவைச் சேர்ந்த வீர மனோகர், அவனியாபுரம் பெரியசாமி நகரைச் சேர்ந்த திரைகடல் மகன் வெங்கடேசன் ஆகிய இருவரிடமும் 11 லட்ச ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தேன்.
வாங்கிய கடனை வட்டியும் முதலுமாக திருப்பி செலுத்தி விட்டேன். கடனை முழுமையாக செலுத்திய பின்பும் இருவரும், கந்துவட்டி கேட்டு தொல்லை கொடுத்து வருகின்றனர்.
இருவர் கைது
மேலும், அவர்கள் இருவரும் என்னைத் தாக்கி எனது செல்போனை பறித்து, வீட்டுக்குள் அடைத்து விட்டுச் சென்றனர். காவல் துறையினர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக கோ.புதூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வீரமனோகர், வெங்கடேசன் ஆகிய இருவரும் கந்துவட்டி கேட்டு தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, காவல் துறையினர் இருவரையும் கந்துவட்டி தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவர்களிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:அதிரடிப்படை நிலை என்ன?- சென்னை உயர் நீதிமன்றம்