மதுரை: சாலையில் கொட்டி கிடந்த ஜல்லிக் கற்களை அகற்றிய போக்குவரத்து காவல் துறையினரை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
மதுரை பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே நேற்றிரவு (பிப் 18), ஜல்லிக் கற்களை ஏற்றிச் சென்ற லாரி தவறுதலாக சாலை நெடுகிலும் கொட்டி சென்றுள்ளது. இதில் அதிக அளவாக டிவிஎஸ் நகர் ரயில்வே சுரங்க பாதை அருகே 10 அடி நீளத்திற்கு ஜல்லிக் கற்கள் சிதறிக் கிடந்தது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் கீழே விழுந்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த சுப்பிரமணியபுரம் காவல்துறையினர், தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பால் தாய், உதவி ஆய்வாளர் சேகர், காவலர் திருப்பதி ஆகியோர் இணைந்து சாலையில் சிதறிக் கிடந்த ஜல்லிக் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் ஜல்லிக் கற்களை ஏற்றிச் சென்ற லாரி கவனக் குறைவின் காரணமாக சரியாக மூடாமல் இருந்ததால் சாலை முழுவதும் ஜல்லிக் கற்களை சிதற விட்டு சென்று இருக்கலாம் எனத் தெரியவந்தது.
சாலையில் கொட்டி கிடந்த ஜல்லிக் கற்களை அகற்றிய போக்குவரத்து காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு ஜல்லிக் கற்களை அகற்றிய போக்குவரத்து காவல் துறையினருக்கு அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்தனர்.