தமிழ்நாடு

tamil nadu

'டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் 66 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்' - சிபிசிஐடி

By

Published : Mar 19, 2020, 11:26 PM IST

மதுரை: குரூப்-4, குரூப்-2 ஏ, விஏஓ தேர்வுகள் முறைகேடு தொடர்பாக இதுவரை 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி காவல் துறையினர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தகவல் தெரிவித்துள்ளனர்.

tnpsc fraud madurai high court cbcid
tnpsc fraud madurai high court cbcid

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பி. ஸ்டாலின் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அம்மனுவில், ”டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கைது செய்யப்படுபவர்கள் அனைவரும் கீழ்மட்டத்தில் உள்ள அலுவலர்களாக உள்ளனர். இவ்வழக்கில் உயர் அலுவலர்களுக்கும் தொடர்புள்ளது. தற்போது தமிழ்நாடு சிபிசிஐடி காவல் துறையினர் இதன் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த முறைகேட்டில் ஈடுபட்ட உயர் அலுவலர்களைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, வழக்கில் தற்போதைய நிலை குறித்து சிபிசிஐடி காவல் துறையினரும், சிபிஐயும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் சிபிசிஐடி ஏடிஜிபி சார்பில் சிபிசிஐடி டிஎஸ்பி ஆர். சந்திரசேகரன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், “தமிழ்நாட்டில் 2016-19ஆம் ஆண்டுகளில் குரூப்-4, குரூப் 2ஏ, விஏஓ தேர்வுகள் முறைகேடு தொடர்பாக இதுவரை 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து முக்கிய ஆவனங்கள், பணம், தங்க நகை, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டிஎன்பிஎஸ்சி கீழ்நிலை ஊழியர்கள் உதவியுடன் முறைகேடு நடைபெற்றுள்ளது.

அலுவலர்கள் சிலர் பணியில் மெத்தனமாக இருந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கு, முக்கியக் கட்டத்தில் உள்ளது. சிபிசிஐடி காவல் துறையினர் நியாயமாகவும், சுதந்திரமாகவும் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை பொறுத்தவரை உயர் அலுவலர்கள் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.

உயர் அலுவலர்களின் தொடர்பில்லாமல் தான் இவர்கள் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவருகிறது. மேலும் இவ்வழக்கில் விசாரணை அலுவலராக சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை முறையாக நடைபெற்றுவருகிறது. விரைவில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். எனவே சிபிஐ-க்கு விசாரணைக்கு மாற்ற வேண்டியதில்லை. மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details