மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட சூடான கேள்விகளுக்கு ராஜேந்திர பாலாஜி அளித்த பதில் பின்வருமாறு:
உள்ளாட்சித் தேர்தல்:-
கேள்வி: உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி? வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது?
பதில்: 'ஏற்கெனவே இருந்து வரும் கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் கூறியுள்ளார்கள். வெற்றி வாய்ப்பைப் பொறுத்தவரையில் அதிமுக-விற்கு சாதகமாகத்தான் இருக்கும். மக்கள் மனநிலையயும் அவ்வாறு மாறியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவின் நல்லாட்சி தொடரும்'.
திருவள்ளுவர் விவகாரம்:-
கேள்வி: தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவள்ளுவரை வடநாட்டவர்கள் மதச்சாயம் பூசி வருகின்றனர் என்று திமுகவின் ஆ.ராசா கூறியுள்ளாரே?
பதில்: 'திருவள்ளுவர் நிச்சயமாக கடவுள் பக்தி கொண்டவராக தான் இருக்க முடியும். அவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே கிடையாது. திருவள்ளுவர், திருக்குறளில் கூறிய உள்ளார்ந்த கருத்துக்களைப் பார்க்கும் போது இந்து மதப்பற்றாளராகத்தான் இருப்பார். திருவள்ளுவர் மீது பற்றுள்ளவர்களும், அவர் மீது பாசமுள்ளவர்களும் தங்களுக்குரிய பாணியிலேயே தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து அவரை வாழ்த்தி வரவேற்று வழிபடுவது அவர்களது உரிமை.
ஆகவே வடக்கு, தெற்காக இருந்தாலும் திருவள்ளுவரின் புகழ் இறைவழிபாடு கொண்டவர்களின் குரலாகத்தான் இருந்திருக்கிறது என்பது என்னுடைய கருத்து'.
உலகப் பொதுமறை:-
கேள்வி: திருக்குறளை பொறுத்தவரையில் உலகப் பொது மறை நூல். ஆகையால் எந்த மதத்தையும் சார்ந்தது கிடையாது என்று கேள்விகள் எழுகிறதே?
பதில்: 'அவர் (திருவள்ளுவர்) மதங்கள் குறித்து எழுதவில்லை. எல்லா மதங்களையும் போற்றிதான் எழுதியுள்ளார். அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று இதுகுறித்து ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே அவர் இந்துவாகத்தான் இருப்பார் என்ற கருத்தை மையப்படுத்தி சிலர் கூறி வருகின்றனர். அதுதான் உண்மையாக இருக்க வேண்டும் என்று நானும் நம்புகிறேன்'.
வெளிநாட்டுப் பயணம்:-
கேள்வி: துணை முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணம் எவ்வாறு அமையப் போகிறது?
பதில்: 'முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் எவ்வாறு நாட்டிற்கு பயனாக இருந்ததோ, அதேபோல் துணை முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணமும் தமிழ்நாட்டு மக்களுக்கும் துறை சார்ந்த திட்டங்களுக்கும் பயனுள்ளதாக நிச்சயம் அமையும்'.
ஆவின் விவகாரம்:-
கேள்வி: ஆவின் தலைவராக தமிழரசன் தேர்ந்தெடுக்கப்பட்டது தவறானது என்ற குற்றச்சாட்டு எழுகிறதே?
பதில்: 'உயர் நீதிமன்ற நீதிபதி ஏற்கெனவே கூறியுள்ளபடி தேர்தல் முறையில், ஆறு கூட்டுறவு ஒன்றியங்களில் தலைவர்களுக்கான தேர்தல், தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் முதலமைச்சரின் அனுமதியோடு பதவி ஏற்பார்கள்'.