தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாணவர்கள் மது அருந்துவது அதிர்ச்சியளிக்கிறது; மது விற்பனைக்குத்தடை விதிக்க நேரிடும் - எச்சரித்த நீதிபதிகள்

சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியைத் தருகிறது. நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை. உரிய தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில் மது விற்பனைக்குத் தடை விதிக்க நேரிடும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

By

Published : Sep 12, 2022, 7:37 PM IST

மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் - எச்சரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் - எச்சரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்

மதுரை:திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்,"தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. மது அருந்தும் பழக்கத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 வரை செயல்படுகின்றன.

இரவில் மது போதையில் வாகனத்தில் செல்வோரால் விபத்துகளும், உயிரிழப்புகளும் நடைபெறுகின்றன. எனவே தமிழ்நாட்டில் 21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதித்தும், மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த அறிவிப்புகளை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வைக்கவும், விலைப்பட்டியல் வைக்கவும், கூடுதல் விற்பனைக்கு மது விற்றால் புகார் அளிக்க உயர் அலுவலர்களின் தொடர்பு எண் மற்றும் விவரங்களை டாஸ்மாக் கடைகளில் எழுதி வைக்கவும், மதுபானப் பாட்டில்களில் அதில் கலந்துள்ள பொருட்கள் மற்றும் தயாரிப்பாளர் விவரங்களைத் தமிழில் குறிப்பிடவும், டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மாணவர்கள் சீருடையுடன் மது அருந்துவது தொடர்பான புகைப்படங்கள் வழங்கப்பட்டன. அதனைப்பார்த்த நீதிபதிகள், "இது போன்ற வழக்கைத் தொடர்ந்த மனுதாரரை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியைத் தருகிறது. நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது? எனத் தெரியவில்லை. இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும்.

இல்லையெனில் மது விற்பனைக்குத் தடை விதிக்க நேரிடும்” எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரர் தொடர்ச்சியாக இந்த வழக்குத்தொடர்பான விவரங்களைத் திரட்டவும், அரசுத்தரப்பில், இது தொடர்பாக விளக்கம் பெற்று தெரிவிக்கவும் உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:இன்ஸ்டாகிராம் காதல்...11ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details