மதுரை:திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி, 1 ஆவது வார்டு கவுன்சிலர் செல்லம்மாள், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "நான் மணப்பாறை நகராட்சி தேர்தலில் 1ஆவது வார்டு கவுன்சிலர் ஆக அதிமுக சார்பில் போட்டியிட்டு மணப்பாறை நகராட்சி உறுப்பினராக உள்ளேன். இந்நிலையில் நகராட்சி தலைவராக எங்கள் கட்சியைச் சேர்ந்த சுதா பாஸ்கரன் தேர்வு செய்யப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக அன்று மதியமே நடைபெற இருந்த துணைத் தலைவர் தேர்தல் எவ்வித காரணமுமின்றி நகராட்சி தேர்தல் ஆணையர் நகராட்சி துணைத் தலைவர் தேர்தலை ஒத்திவைத்தார். அதன்பிறகு துணைத் தலைவர் தேர்தல் இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. நடைபெற உள்ள நகர்மன்றத் துணைத் தலைவர் தேர்தலில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கக் கூடாது என்ற வகையில், தூண்டுதல் மற்றும் மிரட்டல் காரணமாக எனது மகனை வைத்து, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதில் என்னை, சிலர் கடத்தி வைத்துளனர் என எனது மகன் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் என்னை யாரும் கடத்தவும் இல்லை, ஜாதி ரீதியாக வன்கொடுமை எதுவும் செய்யவும் இல்லை. எனது மகன் மூலம் அவதூராக மணப்பாறை காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.