மதுரையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரியும் அர்ச்சனா என்பவர், அரசு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று நூல்கள் வழங்கி வருகிறார் இதுவரை 25 அரசு பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2000 நூல்களை வழங்கியுள்ளார்.
மதுரை திருமலை நாயக்கர் மஹால் அருகே உள்ள மாநகராட்சி திருவள்ளுவர் உயர்நிலைப்பள்ளியில் இன்று நூல் கொடை வழங்கும் விழா நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் 100க்கும் மேற்பட்ட நூல்களை அர்ச்சனா கொடையாக வழங்கினார்.
இது தொடர்பாக ஈடிவி பாரத் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், பள்ளி கல்லூரிகளில் உள்ள மாணவ மாணவியருக்கு தங்களது கல்வி நிலையங்களில் உள்ள நூலகங்கள் குறித்து தெரிவதில்லை. இந்த அனுபவம் எனக்கு நேரடியாக உண்டு என்பதால் தான் இந்த நூல் கொடை திட்டம்.
மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை கொண்டு வர வேண்டும். குறிப்பாக அதனை தொடக்கப்பள்ளி அளவிலேயே கொண்டு வருவதற்கான எண்ணம் அப்போதுதான் உதயமானது. இதன் தாரக மந்திரம் 'நூல் கொடுப்போம் நூலகம் அமைப்போம்' என்பதுதான். இதற்காக எனது நண்பர்கள், மாணவர்களிடம் உதவி பெற்று அரசு பள்ளிகளில் நூலகத்தை ஏற்படுத்தும் முயற்சியை தொடங்கினேன்.
பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியை அர்ச்சனா நூல்கள் அனைத்துமே கதைப் புத்தகங்களாகவே வழங்குகிறேன் அப்போதுதான் மாணவர்கள் ஆர்வமாக வாசிக்க தொடங்குவார்கள். மதுரை நகர் புறத்திலும் மதுரை சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளிலும் நூலகங்களை உருவாக்க தொடர்ந்து நூல்கொடை திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம், என்றார்.
தலைமை ஆசிரியர் சௌந்தரபாண்டியன் மாநகராட்சி திருவள்ளுவர் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சௌந்தரபாண்டியன் கூறுகையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை ஒவ்வொரு பள்ளிக்கும் பாடம் சார்ந்த நூல்களை வழங்குகிறது. ஆனால் அதைத்தாண்டி நன்னெறி போதிக்கிற கதை புத்தகங்கள் ஆசிரியை அர்ச்சனா போன்ற தன்னார்வலர்களிடமிருந்து நாங்கள் பெற்றுக் கொள்கிறோம்.
கதைகளைப் படிக்கும் மாணவர்கள் அந்த கதைகளை திரும்ப எங்களிடம் சொல்ல சொல்லி ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்த முடிகிறது, என்றார்.