மதுரை:சங்க தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் சாமானிய மக்களைக் குறித்தே அதிகம் பேசுகின்றன. அவற்றில் புராணங்கள், கட்டுக்கதைகள் குறித்து மிகக் குறைவாகவே காணப்படுகின்றன என்று இந்திய தொல்லியல் துறை அலுவலர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
மின் முற்றம் இணையவழி கருத்தரங்கம்
புதுச்சேரி தமிழ் ஆசிரியர்களால் நடத்தப்படும் மின் முற்றத்தில் இணையவழி கருத்தரங்கில், இன்று (ஜன.01) மத்திய தொல்லியல் அலுவலர் அமர்நாத் ராமகிருஷ்ணா, "கீழடியும் தமிழர் தொன்மையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். மதுரை, திருமங்கலத்தில் உள்ள மதுரை காமராசர் பல்கலை. உறுப்பு கல்லூரியின் துணை முதல்வரும், தமிழ் துறை தலைவருமான முனைவர் கரு.முருகேசன் வரவேற்றார். இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் அலுவலர் ஸ்ரீதரண் நன்றி தெரிவித்தார்.
இந்த கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணா, "இந்தியத் தொல்லியல் துறையின் சார்பாக, தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களைத் தவிர, விரிவான அகழாய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டிற்கு பிறகு நதிக்கரை நாகரிகங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்து உருவானது. அதனைத் தொடர்ந்து நாங்கள் தமிழ்நாட்டில் வைகை நதிக்கரையை தேர்ந்தெடுத்தோம்.
தமிழ் இலங்கியங்கள் பாடிய வைகை
தமிழ்நாட்டில் காவிரி, தென்பெண்ணை, பாலாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் ஓடினாலும் வைகையை தேர்ந்தெடுத்ததற்கு காரணம், சங்க இலக்கியங்கள் அதிகம் பாடும் ஆறாக வைகை மட்டுமே திகழ்கிறது. பரிபாடலில் மட்டும் 14 இடங்களில் வைகை குறித்து பாடுகிறது. அதன் பொருட்டு கடந்த 2013ஆம் ஆண்டு வைகை ஆறு தொடங்கும் வெள்ளிமலை தொடங்கி கடலில் கலக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தின் ஆற்றங்கரை வரை ஏறக்குறைய 280 கிலோ மீட்டர் தூரம் வைகை ஆற்றின் இருபுறமும் 8 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆய்வுகள் மேற்கொண்டோம்.
இந்த ஆய்வில், 293 இடங்கள் எங்களுக்கு தொல்லியல் சிறப்பு வாய்ந்த களமாக இருந்தன. அவைகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த 100 இடங்களை தேர்வு செய்து, இறுதியாக மூன்று இடங்களை முடிவு செய்தோம். அப்படி தேர்வான இடம் தான், தற்போது மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி.
கீழடி தொல்லியல் மேடு என்பது சற்றேறக்குறைய நான்கரை கிலோ மீட்டர் சுற்றளவும், 110 ஏக்கர் பரப்பளவும் கொண்டதாகும். தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற ஆய்விடங்கள் பெரும்பாலும் ஈமக்காடுகளாக தான் இருந்துள்ளன. கீழடியைப் பொறுத்தவரை மக்கள் வாழ்விடமும், ஈமக்காடும் அருகருகே இருப்பது குறிப்பிடத்தக்கது.
10 விழுக்காடு இடங்களில் மட்டுமே ஆய்வு
தமிழ்நாட்டில் உள்ள தொல்லியல் மேடுகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தொல்லில் மேடாக கீழடி அமைந்தது மிக சிறப்புக்குரிய ஒன்று. கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 6 கட்ட அகழாய்வுப் பணிகள் இங்கு நடைபெற்று முடிந்தாலும், ஒட்டுமொத்த தொல்லியல் பரப்பளவில் 10 விழுக்காட்டிற்கும் குறைவாகவே ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.
ஆகையால் கீழடியில் தொடர்ந்து அறிவியல் ரீதியாக ஆய்வுகள் நடைபெற வேண்டும். ஆறாம் கட்ட அகழாய்வில், கொந்தகை ஈமக்காடும் அகழாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. நமது சங்க இலக்கியங்கள் கூறுகின்ற மூன்று வகையான ஈமச்சடங்கு முறையை இங்கு முழுவதுமாக கண்டறிய முடிந்தது. நமது தமிழ்ச் சங்க இலக்கியங்கள் மக்களின் வாழ்வியல் குறித்தே பெரும்பாலும் பதிவு செய்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் இன்னும் ஆய்வு செய்யப்பட வேண்டிய இடங்கள் பல உள்ளன. அவற்றை எல்லாம் கண்டறிந்து விரிவான தொல்லியல் அகழாய்வுகள் நடைபெற்றால் சங்க இலக்கியங்கள் கூறும் பல்வேறு தகவல்களை, தொல்லியல் சான்றுகளாக வெளிக் கொண்டு வர முடியும்.
கீழடியில் எங்கள் அணி முதல் இரண்டு கட்டம் மேற்கொண்ட அகழாய்வுப் பணிகள் குறித்த முழுமையான அறிக்கை, மத்திய தொல்லியல் துறையின் போதுமான ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் கொண்டு வர இயலவில்லை. அதற்குரிய சூழலை உருவாக்கி கொடுத்தால் ஒரு சில வாரங்களிலேயே அந்த அறிக்கையை தயார் செய்து வழங்க முடியும் என்றார்.
இதையும் படிங்க :முதல் முறையாக மதுரையிலிருந்து வங்கதேசத்திற்கு டிராக்டர்கள் ஏற்றுமதி - தென்னக ரயில்வே சாதனை!