சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை-மகன் இருவர் காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த இரட்டை கொலை வழக்கில், அதே காவல்நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை உள்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே கடந்த 24ஆம் தேதி கரோனா பாதிக்கப்பட்டு சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில், பால்துரையின் மனைவி மங்கயர்திலகம் தனது கணவருக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனவும் அவருக்கு சர்க்கரை அளவு அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும், இதயக்கோளாறு இருப்பதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி கோரி நேற்று முன்தினம் (ஆக.8) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இதற்கிடையில் இன்று காலை (ஆக.10) சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறைக்கைதி சிகிச்சையின்போது உயிரிழந்துள்ளதால் நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணை நடத்தப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சாத்தான்குளம் விவகாரம்: காவலர் முருகன் பிணை கோரி மனு!