தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாநிலங்களவை எம்.பி., தேர்தலில் இடஒதுக்கீடு : உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல்! - மதுரை அண்மை செய்திகள்

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு, விரிவான விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை

By

Published : Jan 28, 2021, 11:05 PM IST

மதுரை:மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி குருவையா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், சட்டப்பேரவை தேர்தல்களில் பட்டியலின, பழங்குடியின பிரிவினருக்கு என தனித் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை பட்டியலின, பழங்குடியின பிரிவினருக்கு என மொத்தம் 46 தனித் தொகுதிகள் உள்ளன.

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதில்லை. இதனால், மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தில் பட்டியலின, பழங்குடியின பிரிவினருக்கு முக்கியத்துவம் இல்லாத நிலையே உள்ளது. இது தொடர்பாக நான் அனுப்பிய மனுவை, சட்டப்பேரவை செயலரின் பரிசீலனைக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் பட்டியலின, பழங்குடியின பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்திடத் தேவையான வகையில் விதிகளை உருவாக்குமாறு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து விரிவான விசாரணையை வரும் பிப்.11ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க:‘தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கும் கும்பல்’ - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details